Showing posts with label இடஒதுக்கீடு. Show all posts
Showing posts with label இடஒதுக்கீடு. Show all posts

Thursday, April 28, 2016

தமிழ் நாட்டின் சாதி சார் அரசியல் - சில குறிப்புகள்

தமிழ்  நாட்டின் சாதி சார் அரசியல் - சில குறிப்புகள் - கல்யாணராமன் ( https://twitter.com/kalyanasc/ )

இவ்விடுகை ராஜன் குறை தமிழ்நாட்டில் சாதிசார் அரசியல் பற்றி எழுதியிருக்கும் முகநூல் குறிப்பை   முன்வைத்து எழுதப்பட்டது.  அதை வாசித்து விட்டு கல்யாணராமன் அவர்களின் (எதிர்வினைக்)கட்டுரையை வாசிப்பது பொருத்தமானதாக இருக்கும்.

சுருக்கமாக ராஜன் குறையின் வாதம் இதுதான். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வெற்றியென்பது பல சாதிச் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதிலேயே இருக்கிறது. எந்த சாதியைச் சேர்ந்த வாக்கு வங்கியும் தன்னளவிலேயே வெற்றி பெற்றுத்தரும் அளவுக்கு எண்ணிக்கை பலம் வாய்ந்ததாக இருப்பதில்லை. எனவே, வெளிப்படையான சாதிக் கட்சிகளைத் தவிர, மற்ற தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் - குறிப்பாக, இரு பெரும் திராவிடக் கட்சிகள் - சாதி வேறுபாடற்ற மக்கள் தொகையின் ஆதரவைப் பெற்றுத்தான் ஆட்சியைப் பிடிக்கிறார்கள், நடத்துகிறார்கள்; எனவே ஆதிக்க சாதிகளின் கூட்டதிகாரம் என்று சொல்வதெல்லாம் மாயை, குழப்பத்தில் எழுந்த மனப்பதிவு என்று கதைக்கிறார்!

இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பல சாதிச் சமூகத்தினரின் ஆதரவின்றி தொகுதி மட்டத்திலோ மாநில மட்டத்திலோ ஆட்சியைப் பிடிக்கமுடியாது என்பது உண்மைதான். Universal adult franchise-ஐ அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட தேர்தல் சனநாயக ஆட்சி முறையில் இது வேறெப்படியும் இருக்கமுடியாது. உள்ளபடியே, மக்கட்தொகையில் 20 விழுக்காடாக இருக்கும் பட்டியல் சாதியினரின் (SC/ST) கணிசமான ஆதரவைப் பெற்றுத்தான் திமுகவும் அதிமுகவும் ஆட்சியைக் கைப்பற்றி வந்திருக்கின்றன. ஆனால் ஆதரவை அளிப்பவர்களுக்கெல்லாம் அதிகாரத்தில் பங்கோ ஆட்சியின் பயனோ கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் உண்மை. இந்தக் கைப்புண்ணுக்கு கட்டாயமாக எந்தக் கண்ணாடியும் தேவைப்படாது.

ஒவ்வொரு திமுக/அதிமுக ஆட்சியின்போதும், அந்த சட்டமன்றத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த கணிசமான பட்டியல் சாதியைச் சேர்ந்த தனித் தொகுதி உறுப்பினர்கள் இருக்கக்கூடும். ஆனால் அவர்களுக்கு பதவியும் அதிகாரமும் கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. எனவே சாதிப் பன்மைத்துவத்திலிருந்து பெறப்படும் வாக்கு ஆதரவு, சாதி சார்ந்த புறக்கணிப்புக்கும், அதன் மறுபக்கமான ஆதிக்கசாதிக் கூட்டதிகாரத்தின் இயக்கத்துக்கும் இடையூறாக இருக்கும் என்பதே ஒரு மாயை தான். நடப்பில் அப்படியெல்லாம் கிடையாது.

அதிகாரப் பகிர்வில் பட்டியல் சாதியினருக்கு இப்படி நேர்கிறதென்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அடித்தட்டுப் பிரிவினரின் - அதாவது ஆதிக்க சாதியினரின் எண்ணிக்கைப் பெரும்பான்மை வாய்க்கப்பெறாத சிறுபான்மை வகுப்பினரின் - கதி என்ன? இவர்களுக்கு உள்ளூர் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் ஊராட்சி அதிகாரமும் சிறுசிறு ஒப்பந்தங்களும் கிடைக்க  வழியுண்டு   . நகராட்சிகளில் வார்டு கவுன்சிலர் பதவிகளும் அதனால் பெறக்கூடிய ”பயன்களும்” கிடைக்கப் பெறலாம். இவற்றைவிட மேலான மட்டங்களுக்கு இவ்வகுப்பினர் சுலபமாக வந்துவிடமுடியாது. இங்குதான் தொகுதிவாரி எண்ணிக்கைப் பெரும்பான்மை (மொத்த மக்கள்தொகையில் 30 விழுக்காடுகளுக்கும் மேலான எண்ணிக்கை பலம்) தேர்தல் களத்தில் கொங்கு வேளாள கவுண்டர், முக்குலத்தோர், நாடார், வன்னியர்,  போன்ற வகுப்பினரின் “இயல்பான” ஆதிக்கத்துக்கு வழிவகுக்கிறது.

மேலும், ஆட்சி அதிகாரத்தை நுகர்ந்து சேர்த்திருக்கும் செல்வமும் சமூகச் செல்வாக்கும் இவர்களுடைய தொடர்ந்த ஆதிக்கத்துக்கு உறுதுணையாக இருக்கின்றன. (இவற்றில் கொங்கு வேளாள கவுண்டர் மற்றும் முக்குலத்தோர் போன்றவை எண்ணிக்கை பலத்தையும் அதிகாரத்தையும் குறிவைத்து, தங்களுக்குள் கொள்வினை கொடுப்பினை இல்லாத தனிச் சாதிகளை இணைப்பதன் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட சாதித் தொகுதிகள் தாம்.) தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சாதிவாரிப் பகுப்பிலும் அமைச்சர்களின் சாதிவாரிப் பகுப்பிலும் இந்தக் கூட்டதிகாரத்தை தெளிவாகக் காணமுடியும். மற்றபடி அரசின் ஆதரவினால் நேரடியாக உருவாக்கப்படும் கல்வி வணிகத்திலும் சாராய ஆலை உரிமங்களிலும், மணல் கொள்ளை நிறுவனங்களிலும், ஏன் ஊடகத்துறையிலும் கூட இந்த வகுப்பினரின் ஆதிக்கத்தை கண்டுகொள்ள முடியும்.

இட ஒதுக்கீடும் அவ்வாறே இந்த ஆதிக்க சாதியினரின் நன்மைக்காகவே எந்த மாற்றமுமின்றி தொடரப்படுகிறது. 1970-இலேயே தங்கள் மக்கட்தொகை விகிதத்துக்கு மிக அதிகமாகவே கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளைப் பெற்றவர்களாக இவர்கள் அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறார்கள் (சட்டநாதன் கமிஷன் அறிக்கை). இருந்தும் தமிழக அரசுகள் வாய்ப்புகளின் மொத்த விகிதத்தை உயர்த்தினார்களேயன்றி இவ்வாதிக்கத்தைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்கள் எண்ணிக்கை பலத்தால் வன்னியர்கள் போராடி ஆட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அதிகாரப் பகிர்வையும் சமூக செல்வாக்கையும் நிறுவ முடிந்திருக்கிறது.

ஆனால் BC/MBC என்ற பட்டியலில் சிக்கித் தவிக்கும் நலிந்த, எண்ணிக்கைச் சிறுபான்மை, வகுப்பினர் இந்த எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதியினரின் பிடியிலிருந்து மீள வாய்ப்பே இல்லை என்று தான் கூறவேண்டும். இட ஒதுக்கீடு மூலம் தங்களுக்கு கிடைத்துவரும் விகிதத்துக்கு மீறிய நலன்களைப் பாதுகாத்திடவே சாதி அடிப்படையில் தரப்படும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் எந்த சாதிக்கு எந்த அளவு போய்ச் சேர்ந்திருக்கிறது என்ற கணக்கெடுப்பை உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி நடத்த மறுக்கிறது நம் ஆளும் வர்க்கம்.

கடைசியாக, இந்த அதிகார வேட்கையும், பொருளீட்டும் வெறியும் நலிந்தவர்களை அவர்களின் வாக்குகளுக்காக “சரிக்கட்டும்” தேவையும் தான் தமிழ்நாட்டு அரசை எங்கும் எதிலும் எவரிடமிருந்தும் சுரண்டும் நிறுவனமாக மாற்றி வைத்திருக்கிறது. இந்தச்  சுரண்டலும் சாதி வலிமை அடிப்படையில் மட்டுமே நடைபெறுகிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தங்களுக்கென்று ஒரு அரசியல் பிரதிநித்துவமோ தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் எண்ணிக்கை பலமோ இல்லாத பட்டியல் இனத்தவரை வெளிப்படையாகவே புறக்கணிப்பது மட்டுமன்றி எவ்வித தயக்கமுமின்றி வன்கொடுமையும் செய்யலாம் என்பதும் இந்தக் கூட்டதிகாரத்தின் தொடர் விளைவே என்றும் கூறமுடியும்..

நடப்பின் அடிப்படையில் பேச இவ்வளவு இருக்கும்போது ராஜன் குறை போன்ற மானுடவியலாளர் சித்தம் போன போக்கில் மனக்கணக்கு போடுவது வியப்பாக இருக்கிறது.

கடைசியாக இரண்டு:

இரு கட்சிகளின் (திமுக, அதிமுக) தலைமையிலான கூட்டணியே இதுவரை ஆதிக்கம் செலுத்தி வருவதால் எல்லா கட்சிகளும் ஒரு எண்ணிக்கை பெரும்பான்மை வகுப்பினரை நிறுத்துவது என்பதற்கு இடமிருந்ததில்லை. அப்படியே நிறுத்தினாலும் ஆதாயம் வேண்டும் அவ்வகுப்பினர் அதிகாரக் கட்சிகளில் ஒன்றுக்குத் தான் வாக்களிப்பார்கள். எந்த ஒரு கட்சி வென்றாலும் ஒட்டுமொத்தமாக அந்த வகுப்பினருக்கு அனுசரனையாகத்தான் நடந்து கொள்ளும் என்பதற்கு சான்றுகள் ஏராளமாக உள்ளன.

இரண்டாவதாக, திமுக/அதிமுக தலைமையில் எண்ணிக்கைச் சிறுபான்மை வகுப்பினர் இருந்து வருவது சாதிப் பன்மைத்துவத்தை சுட்டுவதன்று. மாறாக, அதிகாரப் போட்டியிலும் சாதிய ஆதிக்க மனப்பான்மையிலும் திளைத்திருக்கும் எண்ணிக்கை பெரும்பான்மை வகுப்பினரை ஒன்று திரட்டி அவர்களுக்கிடையே ஏற்படக்கூடிய நேரடியான போட்டியைத் தவிர்த்து கூட்டதிகாரத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கே இந்த ஏற்பாடு என்பது நாடறிந்த ஒன்று. இது ராஜன் குறைக்குத் தெரியவில்லை என்பதும் வியப்பூட்டுவதாக இருக்கிறது.

---கல்யாணராமன்

Saturday, April 07, 2007

326. இடஒதுக்கீடு, க்ரீமி லேயர், சரத்பாபு et al

முதலில் டிஸ்கி: எ.அ.பாலா என்ற நான் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பாளன் கிடையாது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முற்றிலும் உடனடியாக களையப்பட வேண்டும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அதே நேரத்தில், இடஒதுக்கீட்டின் பலன் என்பது சரியானவர்களைச் சென்று அடைதல் அவசியம் என்று நினைக்கிறேன்! அது போலவே, சிலர் போல் கவைக்குதவாத புள்ளி விவரங்கள் மற்றும் லிங்குகளை வாரி வழங்கி வாசிப்பவரை திக்குமுக்காட வைக்கும் நுண்கலையும் யானறியேன் :) Just என் கருத்துக்களை மட்டும் உங்கள் வாசிப்புக்கு வைக்கிறேன்.

1. இடஒதுக்கீடு என்ற கருவி சமூக ஏற்ற தாழ்வை சமன் செய்வதற்கான ஏற்பாடேயன்றி, பொருளாதார ஏற்ற தாழ்வை சமன் செய்வதற்கானது அல்ல என்று வழமையாக ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. இது க்ரீமி லேயரின் சொத்தை வாதம்! தற்போதைய சூழலில், பொருளாதார உயர்வு, சமூகத்தில் பெருமளவு ஒரு அந்தஸ்தை பெற்றுத் தான் தருகிறது. உடனே நடுத்தர உயர்சாதியினருக்கு இது சுலபமாக கிடைத்து விடுகிறதே என்று அரற்றுவது சரியான அணுகுமுறை ஆகாது.

பொருளாதார மேம்பாட்டுக்கு கல்வி ஒரு முக்கியக் காரணியாய் விளங்கும்போது, இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு (பரம் ஏழைகள் என்று கூற வரவில்லை!) அதிக பலன் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறில்லை. அதனாலேயே இடஒதுக்கீட்டிலிருந்து க்ரீமி லேயர் (அது சிறிய சதவிகிதமாக இருந்தாலும்!) விலக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், க்ரீமி லேயரை வரையறுப்பது எப்படி என்பது குறித்து ஆக்கபூர்வமாக சிந்தித்தல் அவசியமாகிறது.

2. OBC க்ரீமி லேயர் (அதை எப்படி வரையறுப்பது என்பது குறித்து பல கருத்துகள் நிலவலாம்) துளியும் சமூக மேம்பாடு பெறவில்லை என்று வாதிடும்போதும், இடஒதுக்கீடு பொருளாதார ஏற்ற தாழ்வை சமன் செய்வதற்கான கருவி அன்று என்று கூறும்போதும், உயர்சாதி ஏழைகள் அனைவருமே சமூகத்தில் அந்தஸ்து பெற்றவர்கள் என்ற கூற்று, நகைமுரணாகி விடுகிறது.

3. உயர்சாதி க்ரீமி லேயருக்கு அரசுக் கல்லூரிகளில் இடமில்லை என்ற பட்சத்தில், OBC-யில் க்ரீமி லேயரை விலக்கலாம் என்று வாதிடுவது, வெறுப்பையும், துவேஷத்தையும் மட்டுமே வளர்க்க உதவும்! அது, OBC க்ரீமி லேயருக்கும் அரசுக் கல்லுரிகளில் இடம் தரத் தேவையில்லை, என்ற கருத்தை முன் வைக்க இடமளிக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

முதலில் OC என்பது OPEN Competition, எந்த சாதியினர் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இந்த 31% என்பது உயர்சாதியினருக்கான இடஒதுக்கீடு அல்ல! ஆனால், பட்டப்படிப்பில், BC-க்கான 50%-ம், உயர்கல்வியில் OBC-க்கான 27%-ம், அவர்களுக்கென்று பிரத்யேகமாக அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு என்பதை புரிந்து கொண்டே, "உயர்சாதி க்ரீமி லேயரே, நீ இதற்குத் தயாரா, அதற்குத் தயாரா?" என்று அறைகூவல் விடுவது வேடிக்கையாக இருக்கிறது.

The Simple Logic here is, "What is applicable in Reserved categories, need not necessarily apply for Open Competition"!!!

4. க்ரீமி லேயர் பிரச்சினைக்கான தீர்வு என்று நோக்கும்போது, என்னளவில், OC-க்கான 31%-இல் ஒரு 8-9%-ஐ பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு (இதிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வருவர் என்பதை நினைவில் கொள்க!) ஒதுக்கலாம் என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதே!

5. அது போலவே, உயர்கல்வியில் அளிக்கப்படவுள்ள 27% இடஒதுக்கீடில் ஒரு 9-10%-ஐ, பிரத்யேகமாக க்ரீமி லேயருக்கு என்று ஒதுக்கி விடுவது நல்லது!!! இதன் மூலம், எல்லா விவாதங்களும், சண்டைகளும் முற்று பெற்று விடும்! அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிக்கும் பெரிய அளவில் ஆபத்து எதுவும் ஏற்படாது! அரசே பந்த் என்று ஒன்றை நடத்த வேண்டிய கேலிக்கூத்தான சூழலும் உருவாகாது :)

6. அடுத்து, க்ரீமி லேயரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்குதல் அவசியம் என்று கூறும் அதே நேரத்தில், Open Competition-இல் போட்டியிடும், பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. People who can afford an higher cost towards education must be asked to pay higher fees. எந்த அளவு உயர்த்தலாம், அதிலும் gradation தேவையா --- இவை போன்று சிந்திக்க நிறைய இருக்கிறது.

7. இங்கு வலை இடஒதுக்கீடு விவாதத்தில் கலந்து கொள்ளும் பெரும்பாலானவர், க்ரீமி லேயர் வரையறைக்குள் வருவதால், இவர்கள் முன்னிறுத்தும் கருத்துகள் ஒரு சார்புத் தன்மை கொண்டவையாக இருப்பதில் ஆச்சரியமில்லை. Self preservation overrides everything else (என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்:))

சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் மிக நலிந்த வகுப்பைச் சேர்ந்த, இடஒதுக்கீட்டின் பலனால் (அதை விட உழைப்பால்!) முன்னேறிய, சரத்பாபு என்ற ஆதர்ச இளைஞரின் கருத்துகளை இங்கு முன் வைப்பதுவும் அவசியமாகிறது. அவர் இடஒதுக்கீடு என்பது ஒரு தலைமுறைக்கு மேல் (அதனால் பயன் அடைந்தவர்களூக்கு) நிறுத்தப்பட வேண்டும் என்று ஆணித்தரமான கருத்தை முன் வைக்கிறார்.
*****************
Reservation should be a mix of all criteria. If you take a caste that comes under reservation, 80 per cent of the people will be poor and 20 per cent rich, the creamy layer. For the general category, it will be the other way around.

I feel equal weightage should be given for the economic background. A study has to be done on what is the purpose of reservation and what it has done to the needy. It should be more effective and efficient. In my case, I would not have demanded for reservation. I accepted it because the society felt I belonged to the deprived class and needed a helping hand.

Today, the opportunities are grabbed by a few. They should be ashamed of their ability if they avail reservation even after becoming an IAS officer or something like that. They are putting a burden on the society and denying a chance to the really needy.

I feel reservation is enough for one generation. For example, if the child's father is educated, he will be able to guide the child properly.


Take my case, I didn't have any system that would make me aware of the IITs and the IIMs. But I will be able to guide my children properly because I am well educated. I got the benefits of reservation but I will never avail of it for my children. I cannot even think of demanding reservation for the next generation.
****************

சரத் போன்ற இளைஞர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் என்று நினைக்கும்போது, மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது. சாதி அடைப்படையிலான இடஒதுக்கீடு காலம் காலமாக (eternally) தொடர வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அடிப்படையிலேயே என் கருத்துகளை முன் வைத்துள்ளேன்!


8. "க்ரீமி லேயரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்க வேண்டும் என்று கோருபவர்கள், OBC ஏழைகளுக்காக "முதலைக் கண்ணீர்" வடிக்கிறார்கள்" என்று அரற்றுபவர்கள், "சவுண்டி பிராமணனாக இருந்தாலும், அவனுக்கும் திமிர் அதிகம் தான்" என்று சாடிக் கொண்டே, அவனது "முன்னேற்றத்திற்காக" (முதலில், உயர்சாதியில் க்ரீமி லேயரை அகற்ற வேண்டும் என்று!) வரிந்து கட்டுவதை மட்டும் "முதலைக் கண்ணீர்" என்று கூறாமல் வேறெப்படி அழைப்பது ???????

9. தாழ்த்தப்பட்டவர்களின் (SC/ST) இடஒதுக்கீட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை எதுவும் விதிக்காத சூழலில், அவர்களையும், (பிற்படுத்தப்பட்டவரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களையும்), தங்கள் போராட்டத்தில் தந்திரமாகச் சேர்த்துக் கொள்ளும் OBC க்ரீமி லேயர் கூட்டம், கிராமத்து டீக்கடைகளில் இரட்டை டம்ளர், கிராமத்துப் பள்ளிகளில் இரட்டைப் பானை போன்ற நடைமுறைகள் இன்றும் விடாமல் கடைபிடிக்கப்படுவதை அதிகம் கண்டு கொள்ளாமல், அவற்றை மாற்ற ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாமல், 2000 வருடத்து புளித்த மாவை மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டும், பார்ப்பனரே மறந்து போய் விட்ட மனு தர்மத்தின் பயனற்ற (useless) கூறுகளை ஆராய்ந்து கொண்டும் வெட்டி வம்படிப்பது, உச்சபட்ச காமெடி, மன்னிக்கவும், டிராஜிடி என்றே உரக்கச் சொல்லத் தோன்றுகிறது.

By --- எ.அ.பாலா

*** 326 ***

Saturday, March 31, 2007

இடஒதுக்கீடு அமல் - 5


முதலில் டிஸ்கி!
க்ரீமி லேயர் வரையறுப்பு, பிற்படுத்தப்பட்டவரில் ஒரு சிறு பிரிவினரே (சில சாதியினரே அதிகமாக) இடஒதுக்கீட்டின் பயனை அனுபவித்து வருவது போன்றவை குறித்து என்னிடம் தீவிரமான கருத்துகள் இருந்தாலும், OBC இடஒதுக்கீடு தேவையற்றது என்ற நிலைப்பாடு என்னிடம் இல்லை. மேலும், இவ்வளவு ஆண்டுகள் இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தும், தாழ்த்தப்பட்டவர் உரிய சமூக நீதி பெற, அது பெரிதாக உதவவில்லை என்பது நிதர்சனம். அது ஏன் என்ற எந்த ஆய்வும் சரியாக செய்யப்படுவதுமில்லை, யார் ஆட்சியில் இருந்தாலும்!

OBC இடஒதுக்கீட்டில் அக்கறை காட்டுபவர்கள், இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏன் உரிய பயனளிக்கவில்லை, அவர்களில் பெரும்பான்மையினர் ஏன் இன்னும் அவல நிலையில் உள்ளனர், ஏன் அவர்கள் இன்னும் தீண்டாமையினால், அநியாய வன்முறைகளால் தாக்கப்படுகின்றனர் என்பவை குறித்து, நியாயமாக காட்ட வேண்டிய அக்கறையையும் காட்டுவதில்லை, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இல்லை! ஏனெனில், OBC போல் தாழ்த்தப்பட்டவர், தேர்தலின்போது ஒரு ஓட்டு வங்கியாக மாறுவதில்லை, இது தான் யதார்த்தம்!

இவ்வளவு ஆண்டுகளில், ஒரு பாப்பாப்பட்டியையும், ஒரு கீரிப்பட்டியையும் தலித் உரிமைக்கான எடுத்துக்காட்டுகளாக காட்டுகிறோம் என்றால், மிக நிச்சயமாக, பதவியில் இருப்பவர்கள் கிள்ளிப் போட்ட துரும்புகள் பயனளிக்கவில்லை தானே! இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும், இட ஒதுக்கீடு குறித்து தெளிவான பார்வை, நோக்கம் என்பது கிடையாது. அவ்வப்பொழுது, ஏதாவது ஸ்டண்ட் அடித்து, சமூக நீதிக் காவலர்கள் என்று காட்டிக் கொள்வது அவசியம். Reservation has clearly become a political game of one-upmanship! எந்த அரசியல்வாதியாவது, என் குடும்பத்தினருக்கோ நெருங்கிய உறவினருக்கோ இட ஒதுக்கீடு வேண்டாம் என்று வெளிப்படையாக கூறிக் கேள்விப்பட்டிருக்கிறோமா???? இதுவும் யதார்த்தம்!

இப்போது சுப்ரீம் கோர்ட் எழுப்பிய வினாக்கள், சந்தேகங்கள் குறித்து: (கோர்ட்டுக்கு சமூக நீதியில் அக்கறை இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அரசுக்கு வேண்டியது, கோர்ட் பிரச்சினையின்றி 27% இடஒதுக்கீடை அமல்படுத்துவது)

1. எதற்காக 1931-ஆம் ஆண்டு பழைய சென்ஸசை வைத்து OBC-க்களை வகைப்படுத்த வேண்டும் ? கோர்ட் இந்த கேள்வியை எழுப்பும் என்று அரசு தரப்புக்குத் தெரியாதா? தடை வந்தால் பரவாயில்லை என்று தெரிந்தே செய்த மாதிரி தோன்றுகிறது! சமூக நீதியில் உண்மையான அக்கறை உள்ள அரசு, லேட்டஸ்ட் சென்ஸஸ் பட்டியலை (இருக்கிறதா என்று தெரியவில்லை) கோர்ட்டில் காட்டியிருக்க வேண்டாமா ? அல்லது (குழலி கூறுவது போல) உயர்கல்வி நிறுவனங்களில் எவ்வளவு இடங்களை (மக்கட்தொகையில் சிறிய சதவிகிதத்தில் உள்ள) உயர்சாதியினர் ஆக்ரமித்துள்ளனர் என்று புள்ளி விவரங்களோடு முதலிலேயே காட்டியிருக்க வேண்டாமா?

2. அது போலவே, கோர்ட் கூறிய, "Reservation cannot be permanent and appear to perpetuate backwardness" என்பதற்கு அரசுத் தரப்பில் பதில் இருந்திருக்க வேண்டும். அதாவது, அடுத்த ஒரு 30 ஆண்டுகள் 27% இடஒதுக்கீடு அமலில் இருக்கும் பட்சத்தில், இந்தந்த அளவில் பிற்படுத்தப்பட்டவர் முன்னேற்றம் ஏற்படும் என்று data தயாரித்திருக்க, அரசுத் தரப்பால் நிச்சயம் முடியும், ஆனால் செய்யவில்லை! அது போலவே, உயர்கல்வி நிறுவனங்களில் (இடங்களைக் கூட்டுவதால்) Infrastructure development குறித்த கருத்துகளை தெளிவாக முன் வைத்திருக்க வேண்டும். ஒரு 30 ஆண்டுகள் கழித்து, 27% இடஒதுக்கீடு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் வாக்கு தருவதில் எதுவும் குடிமுழுகப் போவதில்லை!!!

3. அது போலவே, க்ரீமி லேயரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்காமலேயே, 27%-இல் ஒரு 9% OBC-யில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அளிக்கப்படும் என்று அரசு, க்ரீமி லேயர் விஷயத்தில் middle path எடுத்திருக்கலாம்!

மேற்கூறியவை, நீதிமன்ற விவாதங்களின்போது, அரசு தரப்புக்கு வலு சேர்த்திருக்கும் என்று தோன்றுகிறது. சரியான homework செய்யாமல், இப்போது கூப்பாடு போடுவதில் எந்த பயனும் இல்லை. அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்லும்போது, சரியான data மற்றும் இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான சிந்தனை ஆகியவையோடு சென்றால், சரியான முறையில், இடஒதுக்கீடை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாகவே தோன்றுகிறது.

இவ்விடயத்தை பற்றிய எனது முந்தைய பதிவுகள்

க்ரீமி லேயர்
இடஒதுக்கீடு அமல்-4
இடஒதுக்கீடு அமல்-3
இடஒதுக்கீடு - உரத்த சிந்தனைகள்


என்றென்றும் அன்புடன்
பாலா

*** 320 ***

Thursday, March 29, 2007

27 சதவீத இடஒதுக்கீட்டு : சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

புதுடில்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிற்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து, "IIMS' டாக்டர்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. ஏற்கனவே இட ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடந்து வரும் நலையில், 2007&08 கல்வி ஆண்டு முதல் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அர்பூத் பசாயத், எல்.எஸ்.பாண்டா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில், "இட ஒதுக்கீடு வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். குறைந்தபட்சம் அடுத்த 2008&09 கல்வி ஆண்டு வரையாவது இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்நலையில் , இன்று மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிற்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நன்றி: தினமலர்

பி.கு: அடுத்த விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் என்று தெரிய வந்துள்ளது.

நீதிமன்றம் கூறியவை:

1. 1931 census-ஐ வைத்து, இடஒதுக்கீடு தர வேண்டி, OBC என்ற பிரிவை வகைப்படுத்துவது சரியாகாது.

2. தாழ்த்தப்பட்டவரின் (SC/ST) இடஒதுக்கீடு இடைக்காலத் தடையால் பாதிக்கப்பட மாட்டாது.

3. Reservation cannot be permanent and appear to perpetuate backwardness

4. The state was empowered to enact an affirmative Act to help the backward classes but this action could not be unduly adverse to those who were left out.

5. எந்தெந்த பிரிவினர் சமூக மற்றும் பொருளாதார அளவிலே பின் தங்கியவர்கள் என்று வரையறுப்பதற்குத் தேவையான / அவசியமான data-வை சேகரிப்பதற்கு முன்னதாகவே, இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசு எடுத்த முடிவு சரியானதா என்ற கேள்வி எழுப்பியது.

Also see: சற்றுமுன்: 27 இடஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை

*** 317 ***

Wednesday, October 25, 2006

250. க்ரீமி லேயர் குறித்து

உச்ச நீதிமன்றம் தனது சமீபத்திய தீர்ப்பில் SC/STக்கான (அரசுப்பணியில் பதவி உயர்வுக்கான) இடஒதுக்கீட்டில் க்ரீமி லேயரை வரையறுப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது (தீர்ப்பின் முடிவாக இதைக் கூறவில்லை என்பது அறியத்தக்கது). இருந்தாலும், இது நிச்சயம் தேவையில்லாத ஒன்றே ! இத்தனை ஆண்டுகள் இடஒதுக்கீடு அமலில் இருந்தும் தலித் மற்றும் பழங்குடியினரின் பிரநிதித்துவம் பல துறைகளிலும் (முக்கியமாக உயர் பதவிகளில்) மிகக் குறைவாகவே உள்ளது என்பது கண்கூடு. அவர்களில் சிலர் நல்ல பதவியில் இருந்தாலும், உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை ! அவர்களில் பெரும்பாலோர் (90 சதவிகிதத்துக்கும் மேலே) சமூகத்தில் உரிய அந்தஸ்து இன்னும் பெறவில்லை என்பதும் நிதர்சனம்.

OBC-க்கான க்ரீமி லேயர் 1992-இல் மண்டல் தீர்ப்பின்போது உச்ச நீதி மன்றத்தால் வரையறுக்கப்பட்டது. அதன் மூலம், OBC பிரிவில், உச்ச/உயர் நீதி மன்ற நீதிபதிகள், UPSC உறுப்பினர்கள், குரூப் A/B, கிளாஸ் I அல்லது II மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர்கள், பொதுத்துறை நிறுவன (PSU) அதிகாரிகள், ராணுவத்தில் கர்னல் பதவிக்கு மேல் இருப்பவர்கள் ஆகியோரது பிள்ளைகள் க்ரீமி லேயராக அறிவிக்கப்பட்டு, இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டனர். மேலும், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் சில புரொபஷனல் துறைகள் சார்ந்த வல்லுனர் ஆகியோரின் பிள்ளைகளும், வருடத்திற்கு இரண்டரை லட்சம் வருமானம் உள்ளவரின் பிள்ளைகளும், மண்டல் க்ரீமி லேயரில் அடங்குவர். OBC விஷயத்தில் இது தேவையான ஒன்றே.

ஆனால், இன்ன பிற பிற்படுத்தப்பட்டவருடன் ஒப்பு நோக்கும்போது சமூக நீதி என்ற இலக்கை அடைய தலித்துகள் பத்து மடங்கு தூரம் பயணிக்க வேண்டும் என்று நிச்சயம் கூற முடியும் ! தலித்துகளின் அவல நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. SC/ST க்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் பல அரசுத் துறைகளில் பல காலமாக நிரப்பப்படாமல் இருப்பதையும் பார்க்கிறோம் ! மேலும், தற்போதைய தீர்ப்பு, SC/ST-க்கான க்ரீமி லேயரை வரையறுப்பது குறித்து தெளிவாக எதுவும் சொல்லவில்லை. OBC-க்கான க்ரீமி லேயர் வரையறுத்தலை தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் அப்ளை செய்வது சரியானதல்ல, ஏற்றுக் கொள்ளத் தக்கதும் அல்ல ! இதனால் குழப்பமே மிஞ்சும்.

அடுத்து, அரசுப்பணிகளில் OBC-க்கான இடஒதுக்கீட்டில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள க்ரீமி லேயர் விஷயத்தை, தற்போது நடைமுறைக்கு வர உள்ள, உயர் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீட்டிலும் எடுத்து வருவதற்கு, ஓட்டு அரசியலில் பேர் போன சிறிதும் பெரியதுமான பல அரசியல் கட்சிகள் (கம்யூனிஸ்டுகள் தவிர்த்து!) கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இடஒதுக்கீட்டை நீர்த்து போக வைக்கும் முயற்சி என்றும் குற்றம் சாட்டுகின்றன ! க்ரீமி லேயர் வரையறுக்கப்படாமல் உயர் கல்வி நிறுவன இடஒதுக்கீடு (2007-இல்) அமலுக்கு வந்து, பின்னாளில் இது தொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டால், நீதிமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் இடையே இன்னொரு பிரச்சினை உருவாக வாய்ப்புள்ளது.

இறுதியாக, இப்போதுள்ள உயர் சாதியினர் / இன்ன பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகிய இரு தரப்பினரிடமும், தலித்துகளுடன் சமூக வளங்களை / பயன்களை சமமாக பங்கிட்டுக் கொள்வதில் பொதுவாக ஒரு மனத்தடை நிலவுகிறது என்பது உண்மை. தலித் மற்றும் பழங்குடியினரின் அவலமும், அவர்கள் சந்திக்கும் வன்கொடுமைகளும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்க, எல்லாரும் வாய் வார்த்தையாக, நமக்கு அவற்றில் எந்த பொறுப்பும் இல்லை என்ற வகையில் பேசிக் கொண்டிருக்கிறோம் !!! தலித்துகளை பொருத்தவரை, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டையே அவர்களால் இன்று வரை நியாயமாக அனுபவித்து பயன் பெற முடியவில்லை ! அப்புறம் என்ன SC/ST யில் க்ரீமி லேயர் ??? எந்த விதத்தில் பார்த்தாலும், அவர்களில் க்ரீமி லேயர் என்பதற்கு தகுதியானவர் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் இருப்பர் என்று அறுதியிட்டு கூற இயலும்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, October 20, 2006

அரசுப்பணியில் இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம்

**********************************
எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு சரியே: உச்ச நீதிமன்ற தீர்ப்பு

அரசு வேலையில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவது சரியே என்று உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. அதே சமயம் ஒட்டுமொத்த ஒதுக்கீடு மொத்தப் பதவியில் 50%-க்கு மிகாமல் இருக்க வேண்டும், பொருளாதார ரீதியாக வசதியாக இருக்கும் உயர் வருவாய்ப் பிரிவினருக்கு இச் சலுகை தரப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியது.

தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால், கே.ஜி. பாலகிருஷ்ணன், எஸ்.எச். கபாடியா, சி.கே. தாக்கர், பி.கே. பாலசுப்பிரமணியன் அடங்கிய பெஞ்ச் வியாழக்கிழமை இத் தீர்ப்பை வழங்கியது.

அரசியல் சட்டத்தின் 77, 81, 82, 85-வது திருத்த சட்டங்களை ஆட்சேபித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசியல் சட்டத்தின் அடிப்படையையே இத் திருத்தங்கள் மாற்றுவதாகவும், அனைவரும் சமம் என்ற அரசியல் சட்டப் பிரிவுக்கு முரணாக இச்சலுகை இருப்பதாகவும் மனுதாரர்கள் வாதிட்டனர்.

அரசு வேலையில் சேர்ந்த பிறகு ஊழியர்கள் அனைவரும் சமமாக பாவிக்கப்பட வேண்டும், சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்குவது மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மனச்சோர்வையும், பணியில் ஈடுபாட்டுக் குறைவையும் ஏற்படுத்தும் என்று மனுதாரர்கள் ஆட்சேபித்தனர்.

இந்த ஆட்சேபங்களை பெஞ்ச் தள்ளுபடி செய்தது. ஆண்டாண்டு காலமாக அழுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள் சமூகத்தில் சம அந்தஸ்தைப் பெற, இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியை வழங்கும் கருவியாக இங்கே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட துறையில் அல்லது பதவியில் இப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது என்று அரசு கருதினால், இப்படிப் பதவி உயர்வின் மூலம் இப் பிரிவினரை நியமித்துக் கொள்ள அரசுக்கு உரிமை இருக்கிறது.

அந்தந்த மாநிலங்களின் நிலைமைக்கு ஏற்ப இதை முடிவு செய்யலாம். அப்படிச் செய்யும்போது யாராவது தங்களுக்கு பாதிப்பு நேரிட்டுவிட்டதாகக் கருதினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டு அளவு 50%-ஐத் தாண்டக் கூடாது. அதே போல, வசதி வாய்ப்புடன் வாழும் உயர் வருவாய்ப் பிரிவினர் இச் சலுகையை அனுபவிக்க இடம் தரக்கூடாது என்று பெஞ்ச் தீர்ப்பளித்தது. நிர்வாகத் திறனையும் அரசு மனதில் கொண்டு இச் சலுகையை வழங்க வேண்டும் என்றும் பெஞ்ச் ஆலோசனை தெரிவித்தது.
*****************************
நன்றி: தினமணி

பி.கு: மேற்கூறிய வழக்கில், இரண்டு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

1. இடஒதுக்கீடு தொடர்பாக அரசு மேற்கொண்ட அரசியல் சட்ட திருத்தங்கள், திருத்தப்பட்ட அரசியல் சட்டத்தின் அடிப்படைத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறதா என்பது

2.இடஒதுக்கீட்டை செயல்படுத்தும்போது, Article 16-இல் சொல்லப்பட்டுள்ள சமன்பாட்டையும், கடைபிடிக்கப்பட வேண்டியவற்றையும், அரசு தெளிவாக சீர் நோக்கி பார்ப்பதும், பாவிப்பதும் குறித்து


Article 16 Equality of opportunity in matters of public employment

(1) There shall be equality of opportunity for all citizens in matters relating to employment or appointment to any office under the State.

(2) No citizen shall, on grounds only of religion, race, caste, sex, descent, place of birth, residence or any of them, be ineligible for, or discriminated against in respect of, any employment or office under the State.

(3) Nothing in this article shall prevent Parliament from making any law prescribing, in regard to a class or classes of employment or appointment to an office under the Government of, or any local or other authority within, a State or Union territory, any requirement as to residence within that State or Union territory prior to such employment or appointment.

(4) Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State.

(4A) Nothing in this article shall prevent the State from making any provision for reservation in matters of promotion to any class or classes of posts in the services under the State in favour of the Scheduled Castes and the Scheduled Tribes which, in the opinion of the State, are not adequately represented in the services under the State.

(5) Nothing in this article shall affect the operation of any law which provides that the incumbent of an office in connection with the affairs of any religious or denominational institution or any member of the governing body thereof shall be a person professing a particular religion or belonging to a particular denomination.

உச்ச நீதிமன்றம், முக்கியமாக, இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு, க்ரீமி லேயர் வரையறுப்பு, தாழ்த்தப்பட்டவர்களையும், பிற பிற்படுத்தப்பட்டவர்களையும் பிரித்து நோக்கல் என்ற மூன்று விஷயங்களும் அவசியம் கடைபிடிக்கப்பட வேண்டியவை என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. அதே போல், பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதின் தேவையை (Article 335-க்கு உட்பட்டு) மாநில அரசுகளே நிர்ணயம் செய்யலாம் என்றும் கூறியிருக்கிறது.

Article 335 Claims of Scheduled Castes and Scheduled Tribes to services and posts

The claims of the members of the Scheduled Castes and the Scheduled Tribes shall be taken into consideration, consistently with the maintenance of efficiency of administration, in the making of appointments to services and posts in connection with the affairs of the Union or of a State.

க்ரீமி லேயரை SC/STயில் வரையறுப்பது தேவையில்லை என நினைக்கிறேன். இட ஒதுக்கீடு அமல்படுத்தி இத்தனை வருடங்கள் ஆகியும், அவர்களில் பலர் அதன் பலனை முழுமையான அளவில் பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். இப்பிரிவினரின் பிரநிதித்துவம், பல துறைகளிலும் இன்றும் குறைவாகவே உள்ளது.

அதே நேரத்தில், OBC-யில் க்ரீமி லேயரை வரையறுப்பது நிச்சயம் தேவையானதே ! அல்லது, OBC-யில் இடஒதுக்கீட்டினால் பயனடைந்து முன்னேறியதாக அறியப்படும் சில சாதிகளை விலக்குதல் வேண்டும்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, September 09, 2006

இடஒதுக்கீடு அமல் - 4

இத்தனை வருடங்களில், மிகச் சில அரசுப் பள்ளிகளே, தரமானவை என்று கூறத்தக்க அளவில் உள்ளன. இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் (முக்கியமாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்!) இயன்ற அளவில், அரசுப் பள்ளிகளை தத்தெடுத்துக் கொள்வதன் மூலம், ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சிறந்த அடிப்படைக் கல்வியை தர இயலும். மேலும், அரசும், பெரு நிறுவனங்களும் இணைந்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தனிப்பள்ளிகளே கூடத் தொடங்கலாம்.

இதனால், அம்மாணவர்கள் பிற எலீட் மாணவர்களுடன் ஒப்பீடு செய்யப்பட வேண்டிய அவசியமின்றி, நன்றாகப் படித்து, உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான திறனை, தங்கள் உழைப்பால் பெற வல்ல சாதகமான சூழலும் அமையும். தனியார் நிறுவனங்களில் வேலையில் இடஒதுக்கீடு என்பதை விட இது எவ்வளவோ மேல் என்பது என் கருத்து !!! பெண்கல்வி பின் தங்கியிருந்த காலகட்டத்தில், பெண்களுக்காகவே பள்ளிகளும், கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. அதனால், நல்ல பலனும் கிட்டியது. அது போலவே, ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கென பள்ளிகளும், கல்லூரிகளும் தொடங்குவது நிச்சயம் பலனளிக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

சாதி அடிப்படையிலான ஏற்ற தாழ்வுகள் சமூகத்தில் நிலவுவதை மறுக்க இயலாது. அதனால் நிகழும் வன்முறையையும், அவமானங்களையும், நம் சமூகத்திலிருந்து முற்றாக விலக்க நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம் தான் ! அதே நேரத்தில், இடஒதுக்கீட்டுக்குள் இருக்கும் / இருக்க விரும்பும் எல்லா தரப்பினரும் ஒரே மாதிரியான அளவில், சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவிப்பதில்லை என்பதும் உண்மை தானே ! சமூகத்தில் எல்லா வகையிலும் பின் தங்கியுள்ள ஒரு சாராரின் முன்னேற்றத்திற்கு வேண்டி ஏற்படுத்தப்பட்ட (இடஒதுக்கீடு தரும்) ஒரு திட்டம், அரசியல் தரகர்களால், தற்போது எண்ணிக்கை விளையாட்டாய் மாறி விட்டது கொடுமை தான் ! அதாவது, சாதிகளும் இருக்கின்றன, சாதி அரசியலும் மென்மேலும் பலமடைந்து வருகிறது.

தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும்போது சாதி பேதமில்லா சமுதாயம் என்ற இலக்கு ஒரு மிக நீண்ட கனவு என்று தான் கூற வேண்டும். நம் நாட்டில் கல்வி குறித்த அனைத்து விவாதங்களும், அரசியல்வாதிகளின் சுயநலத்தால், இடஒதுக்கீடு என்ற ஒன்றை நோக்கியே பாய்வது சரியானதா ?? ஏனெனில், இடஒதுக்கீடு (மட்டுமே!) சமூக நீதிக்கு தீர்வாக அமைய முடியாது.

என்றென்றும் அன்புடன்
பாலா

பி.கு: அனானிகளும் பின்னூட்டமிடலாம் !

இடஒதுக்கீடு அமல் - 3

உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு மூன்று கட்டங்களில் நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறப்படும் நிலையில், சற்று பின்னோக்கிப் பார்ப்போம். ஐஐடிகளில் 1973-இல் (டோண்டுவை பொருத்தவரை, சமீபத்தில்!) SC / ST மாணவர்களுக்கு 22.5% இடஒதுக்கீடு அமலுக்கு வந்தபோது , JEE தேர்வில் பத்துக்கும் குறைவான மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கும், Chandy கமிட்டியின் பரிந்துரைப்படி, சீட்டுக்கள் வழங்கப்பட்டன. அவர்களில் எல்லோருமே, பின் தங்கிய கிராமங்களிலிருந்து, நூலகமோ, ஆய்வுக்கூடமோ இல்லாத தரமற்ற பள்ளிகளில் படித்தவர்கள். அனைவருமே பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர் என்பதைக் கூறத் தேவையில்லை ! அம்மாணவர்களை (அடுத்த ஆண்டுக்கான) முதலாண்டு பொறியியற் கல்விக்கு தயார்படுத்த வேண்டி, ஒரு வருட தனிப்பயிற்சி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ஒரு வருடத்திலேயே அம்மாணவர்களில் பலர் வெளியேறி விட்டனர். மிச்சமிருந்தவர், ஐஐடிகளில் அனுமதிக்கப்பட்டு, படாத பாடு பட்டனர். இறுதியில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மிகச்சிலரே பட்டப் படிப்பை முடித்தனர் !

மேற்கூறியதை வைத்துப் பார்க்கும்போது, இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதோடு அரசின் கடமை முடிந்து விடுகிறதா என்ற கேள்வி எழுகிறது ! இது போல கல்லூரி படிப்பை முடிக்காமல் வெளியேறும் தலித் மாணவர்களை அரசு துளியும் கண்டு கொள்வதில்லை. மேலும், ஐஐடிகளிலும் இன்னும் சில கல்லூரிகளிலும், விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய சூழலில், அரசு அப்போது நிர்ணயித்திருந்த (இலவச வசதி பெறுவதற்கான) வருவாய் வரம்பு மிகக் குறைவானதாக இருந்ததால், மிகச்சிலரே இலவசக் கல்விக்கு தகுதி பெற்றவராய் இருந்தனர் ! மற்ற மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு என்பது அவர்கள் வாழ்வில், எல்லா வகையிலும் பெரும் போராட்டம் தான் ! இச்சூழலில், ஒரு தலித் மாணவர் கூட, இதுவரை பொதுப்பிரிவில், சீட் பெறவில்லை என்பது தான் சுடும் உண்மை !!! அதாவது, பொதுப்பிரிவிலுள்ள சீட்டுகளை ஒதுக்கப்பட்டவர் எடுத்துக் கொள்கின்றனர் என்று பொத்தாம் பொதுவாகக் கூறுவது சரியில்லை.

சீட்டுகளின் எண்ணிக்கையை (பொதுப்பிரிவு பாதிக்காத வகையில்!) உயர்த்துவதோ, ஆசிரியர்களின் சம்பளத்தை / ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதோ இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்பது நிதர்சனம். ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நுழைபவர்களின் (அறிவியல், கணிதம் போன்றவற்றில்) அடிப்படை அறிவு பலமாக இருத்தல் அவசியம். அதனாலேயே, எட்டாவது வகுப்பிலிருந்தே, பின் தங்கிய கிராமப்புறச் சூழலிலிருந்து வரும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி தருவதும் அவசியமாகிறது.

"கல்வி ஓர் அடிப்படை உரிமை" என்பதை உணரவே, சுதந்திரத்திற்குப் பின், நமக்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டது. அப்படியும், எந்த அரசும், இதற்காக, உருப்படியாக எதையும் செய்ய முன் வரவில்லை. அடிப்படைக் கல்வியின் (Primary/Secondary education) தரத்தை மேம்படுத்த பைசா செலவழிக்க விரும்பாத அரசு, மாறாக, "உயர்" கல்விக்காக (சீட்டுகளை அதிகப்படுத்துவதன் தொடர்ச்சியாக!) ஆயிரமாயிரம் கோடிகளை இறைக்க தயாராக உள்ளது பெரிய கேலிக் கூத்து ! இந்த அணுகுமுறை சரியானதா / பலன் தருமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாய் தொக்கி நிற்கிறது ?

படிக்க விரும்பும் எல்லாருக்கும் கல்வி வாய்ப்பு அளிக்க வல்ல சூழலை அரசால், மிக நிச்சயமாக உருவாக்க இயலும். ஆனால், அதற்கு, அரசு தன் வருவாயை (பணக்காரர்களுக்கு சலுகைகள் வழங்குவதையும், பெரு நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிப்பதையும் நிறுத்திக் கொண்டு) பெருக்கிக் கொள்வதும் அவசியமாகிறது !

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, August 21, 2006

இடஒதுக்கீடு அமல் - 2

பார்க்க:
"இடஒதுக்கீடு அமுல் - வீரப்ப மொய்லி"

********************
சிறிது நேரத்திற்கு முன் இடஒதுக்கீடு குறித்து ND TV-யில் Flash செய்திகள் பார்த்தேன். அதை பகிர்ந்து கொள்கிறேன்.

*********************
1. 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சர் குழு (Cabinet) ஒப்புதல் அளித்துள்ளது

2. வீரப்ப மொய்லி CNN-IBN பேட்டியில் கூறியது போல, இடஒதுக்கீடு பல கட்டங்களில் (in phases) நிறைவேற்றப்படுகிறது

3. க்ரீமி லேயர் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளது

4. முதல் கட்டத்தில் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் மட்டுமே, இடஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.

5. ஆகஸ்டு 25ஆம் தேதி, இடஒதுக்கீட்டிற்கான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

********************

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, August 13, 2006

இடஒதுக்கீடு அமுல் - வீரப்ப மொய்லி

27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடும், பொதுவாக குழப்பமும் நிலவும் நிலையில், CNN-IBN தொலைக்காட்சியில் கரண் தபாருடனான ஒரு நேர்முகப் பேட்டியில், மேற்பார்வைக் குழுவின் (Oversight Committee) தலைவர் ஆன வீரப்ப மொய்லி, பின் வருமாறு கூறியுள்ளார்.

1. இவ்விஷயத்தில் உயர்கல்வி நிறுவனங்களை மிரட்டிப் பணிய வைக்கும் (Bulldozing) பேச்சுக்கே இடமில்லை !

2. நிறுவன வாரியாக நான் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே, இடஒதுக்கீட்டை எவ்வாறு செயல்படுத்துவது (அதாவது, ஒரு கட்டத்திலா, பல கட்டங்களிலா) என்ற முடிவு எடுக்கப்படும்.

3. கல்வி நிறுவனங்கள் மேற்பார்வைக் குழுவின் ஆலோசனைகளை பரிசீலித்து, அவைகளின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது குறித்து, கல்வி நிறுவனங்களே ஒரு நல்ல முடிவெடுக்க வாய்ப்பு தரப்படும் என்ற சாத்தியம் உள்ளது.

4. இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது பற்றி ஆராய்ந்த ஐந்து துணைக் குழுக்களுமே (Sub-groups) இடஒதுக்கீட்டை ஒரே கட்டத்தில் (one phase) நடைமுறைக்கு கொண்டு வருவது இயலாத காரியம் என்று கூறியிருக்கின்றன.

5. உயர்கல்வி நிறுவனங்களுடனும், கல்வி வல்லுனர்களுடனும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்த பின்னர், எனது தலைமையிலான மேற்பார்வைக் குழு இறுதி முடிவெடுக்கும்.

6. ஆகஸ்டு 31-ஆம் தேதி, மேற்பார்வைக் குழு தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.

7. உயர்கல்வி நிறுவனங்களின் தரம் (Excellence) பாதிக்காத வகையில், இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது தான், முக்கியக் குறிக்கோளாகக் (Main Theme) கொள்ளப் பட்டுள்ளது !

திரு.வீரப்ப மொய்லி கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, "எடுத்தோம், கவுத்தோம்!" என்றில்லாமல், பிற்படுத்தப்பட்டவரில் உண்மையான தேவையிருப்போர் முழுப்பலன் பெறும் வகையில், ஓட்டுக்களுக்காக என்றில்லாமல், யதார்த்தத்தை கருத்தில் கொண்டு, விருப்பு வெறுப்பின்றி, நேர்மையான முறையில் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. பார்க்கலாம் !

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, June 19, 2006

இடஒதுக்கீடு - உரத்த சிந்தனைகள்

1. IIT களிலும், IIM களிலும் ஆண்டுதோறும் பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்களில் பெரும்பாலோர், முற்பட்ட வகுப்பினரே என்ற நிலைமை, தகுதி (Merit) உடையவர் பலரும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை பறை சாற்றினாலும், தகுதிக்கு, பலமான அடிப்படைக் கல்வி ஒரு முக்கியக்காரணம் இல்லையா ? அந்த வாய்ப்பு கிடைக்காதவர்களை தகுதியற்றவர் என்று கூற முடியுமா ? தற்போது படிப்பால் உயர்ந்துள்ள பிற்படுத்தப்பட்டவரில் 75 சதவிகிதத்தினர், பெற்றோர் அல்லது நண்பர்கள் வாயிலாக அறிவு பூர்வமான ஆதரவு எதுவும் கிடைக்கப் பெறாதவரே. அதனால், தரமான அடிப்படைக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வல்ல சூழலை முதலில் உண்டாக்குவது அவசியமான ஒன்று. இதன் மூலம், பல தரப்பினரும் தகுதி அடிப்படையில் போட்டியிடவல்ல காலம் வரும் வரையில், இடஒதுக்கீடு தேவையான ஒன்றாகவே தோன்றுகிறது.


2. அடுத்து, OBC யில் உள்ள creamy layer தரப்பினரையும், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மக்களையும் இடஒதுக்கீட்டில் சமனாகக் கருதும் வகையில் ஒரு கொள்கையை உருவாக்குவது, சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து, இடஒதுக்கீட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு சுமுகமான சூழல் ஏற்பட பெருமளவு உதவும் என்பது என் தனிப்பட்ட கருத்து.


3. IIT மற்றும் IIM களில் படிப்பவர்களுக்கு எதற்கு சாமானியரின் வரிப்பணத்திலிருந்து அரசு, கல்விக் கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும் ? இக்கல்லூரிகளில் பயில்பவர்களில் பெரும்பாலோர் பொருளாதாரச் சூழல் நன்றாக உள்ள குடும்பங்களிலிருந்து வருபவர்கள் தான். நுழைவுத் தேர்வுக்கு நிறைய செலவு செய்து பயிற்சி மேற்கொண்டு தேர்வெழுதுபவர்கள் தான் ! எப்படியும் இக்கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்களில் 90 % சதவிகிதம் பேர் அயல்நாடு சென்று விடுகின்றனர். மேலும், படிப்பு முடிந்தவுடன், அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், தேவையென்றால், படிப்புக்கு கடனுதவி மட்டும் வழங்குவதே சரியானது.

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, June 17, 2006

Reservation குறித்து மூன்று கேள்விகள்

'தலைப்பு' ஊக்கம்: அன்புக்குரிய 'பெனாத்தலார்'

1. பிற்படுத்தப்பட்டவரில், Creamy Layer வகையினர் சிறிய சதவிகிதமே இருக்கையில், அவர்களை 27% உயர்கல்வியில் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பதற்கு, சிலர் ஏன் ஆரவார எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ? இதற்கு சுயநலம் தவிர வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா ? கம்யூனிஸ்ட்கள் Creamy layer-ஐ விலக்கி வைப்பதற்கு ஆதரவாக குரல் எழுப்பியது, இது குறித்து மத்திய அரசுக்கு சரியான செய்தியை அனுப்பியிருக்கும் என்று நம்பலாம்.

2. திரு.ராமதாஸ், Creamy Layer-க்கு ஆதரவாக, ஒருவர் நூறு பன்றிகள் வைத்திருந்து, ஆண்டுக்கு ஒரு லட்சம் சம்பாதித்தும், அவர் குடும்பத்தில் ஒருவர் கூட படிக்காமல் இருப்பதற்கான சாத்தியத்தை (இந்த வார குமுதம் பேட்டியில்!) எடுத்துக் காட்டி, பொருளாதார அளவுகோல் கூடாது என்கிறார் ! நல்ல உதாரணம் தான் ! இதற்கு எதிர்மறை லாஜிக்கின்படி, பொருளாதார பற்றாக்குறையினால், தகுதியிருந்தும் படிக்க வழியில்லாத முற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீட்டில் ஒரு சிறு சதவிகிதம் தருவதில் என்ன தவறு ?

3. தொடக்கக் கல்வியில் பிற்படுத்தப்பட்டவருக்கு 25% சதவிகித இடஒதுக்கீடு என்பதை கிடப்பில் போட்டு விட்டு, உயர்கல்வியில் மட்டும் இடஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வரும் இந்த முயற்சி "ஓட்டு வங்கி அரசியல்" அன்றி, வேறென்னவாக இருக்க முடியும் ?

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails